புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை அச்சுறுத்துகிறது
கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்தக் கோரிக்கையின் பின்னணி மற்றும் அவசியம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ரயில் நிலையத்தை அடையும் பாதை முழுவதும் புதர்கள் சூழ்ந்தும், தெருவிளக்குகள் இல்லாமலும் இருப்பதால், அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், இருகூர், எஸ்.ஏ.ஹெச்.எஸ் காலனி, டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ரயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தும் வசதி இல்லாததால், பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர்.
மேலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், பயணிகள் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு அல்லது விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதோடு, பயணிகளுக்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, செல்லும் பாதையையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.