மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை
சிவகங்கை மாவட்டத்தில் சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்துடன் மயானப் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர், தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அந்தப் பணியை அரசு நிரந்தரப் பணியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் பி.ஏ பட்டதாரி. சிவகங்கையில் உள்ள மன்னர் துரை சிங்கம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். சசிகுமாரின் தந்தை நீண்ட காலமாக மயானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததால், அவருடைய குடும்பத்திற்கு சமூக ரீதியான புறக்கணிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்காமல், குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது.
இந்த நிலையை உணர்ந்த சசிகுமார், தனது படிப்பைத் தாண்டி, தந்தை செய்து வந்த மயானப் பணிகளைத் தொடர முடிவு செய்தார். ஆரம்பத்தில் இந்தப் பணியில் ஈடுபடுவது மன ரீதியாக சவாலாக இருந்தாலும், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அதனை ஏற்றுக் கொண்டார்.
காலப்போக்கில், ஒரே சமூகத்திற்குள் பணிபுரிந்தால் வருமானம் போதாது என்பதை உணர்ந்த அவர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூக மக்களின் மயானங்களிலும் பணியாற்றத் தொடங்கினார்.
இயற்கை எய்தியவர்களுக்காக மயானங்களில் குழி தோண்டுதல், உடல்களை எரியூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறும் சசிகுமார், அதன்மூலம் கிடைக்கும் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வருகிறார். சாதி, மத பேதமின்றி அவர் செய்யும் இந்தப் பணி, அவரது குடும்பத்தினரால் புனிதமான சேவையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், போதிய வருமானம் இல்லாததால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும், மயானப் பணியில் ஈடுபடுவதால் சமூகத்தில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மயானப் பணிக்கான சமூக மரியாதையை உருவாக்கவும், இந்தப் பணியை அரசு நிரந்தரப் பணியாக அறிவிக்க வேண்டும் என்று சசிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இத்தகைய பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.