நவோதயா பள்ளிகள் அமைப்பு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு
தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்குவதற்கான பொருத்தமான இடங்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் மாநில அரசுகள் கட்டாயமாக ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், கல்வி என்பது ஒருங்கிணைந்த பொது பட்டியலின் கீழ் வரும் விடயம் என்பதால், மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று தெளிவுபடுத்தினர். மேலும் கல்வி விவகாரத்தை மொழி சார்ந்த சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்றும், தமிழக மக்களை தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.
மத்திய அரசின் முயற்சிகளை திணிப்பாகப் பார்க்காமல், மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பாகக் கருத வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக தமிழகம் இல்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், “எங்கள் மாநிலம், எங்கள் அரசு” போன்ற அணுகுமுறைகளைத் தவிர்த்து, கூட்டாட்சி கொள்கையின் அடிப்படையில் இந்தியா இயங்கும் நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இறுதியாக, ஆறு வாரங்களுக்குள் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கியது.