டெல்டா மாவட்டங்களில் கனமழை — நெற்பயிர்கள் சேதம்; ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பெருமளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து, பாதிப்பு நிலைமை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார்.
அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை மூன்று நாட்களாக தமிழகமெங்கும் பரவலாக பெய்தது. இதையடுத்து, கடந்த 19ஆம் தேதி மாநில அவசரநிலை மையத்தில் இருந்து, திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பின்னர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்தும், மேற்கொள்ளப்பட்ட முன் தயாரிப்புகள் பற்றியும் நேற்று மீண்டும் ஆய்வு நடத்தினார்.
ஆய்வு கூட்டத்தின் போது, மழை சராசரியாக 56.61 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வெள்ளம் அல்லது மழை பாதிப்பால் மக்கள் தங்குவதற்கான தற்காலிக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், உணவு, குடிநீர், மருத்துவம் போன்ற வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.
சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நகர்ப்புற மற்றும் பொது பணித்துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும், நெல் கொள்முதல் மற்றும் சேமிப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் கொள்முதல் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் எனவும், மழையால் நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாக்க துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதேபோல், நெல்லின் ஈரப்பத அளவை 17% இலிருந்து 22% ஆக தளர்த்த தமிழக அரசு மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளதையும், இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது ஆழ்ந்த தாழ்வாக வலுப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.
இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழை, சில இடங்களில் அதி கனமழை பெய்யலாம் எனவும், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் — முதல் கட்ட எச்சரிக்கை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலையான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மதகு வாயில்கள் வழியாக விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்கள் அடையாறு ஆற்றுக்குள் இறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என நீர்வளத்துறை எச்சரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏரி முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு அதிகம். இதனை முன்னிட்டு, ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.