தென்காசியில் தொடர்மழை — முதல்வர் ஸ்டாலின் வருகை தள்ளிவைப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தென்காசி மாவட்டத்துக்கான முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திட்டமிட்ட பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. இந்த முறை மழை அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் அதிகாரிகளுடன் ஆலோசித்து, அதிக மழை ஏற்படும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு முதல்வர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தின் இயல்பான மழை அளவு 16.60 செ.மீ. ஆனால் இதுவரை 23.75 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் இயல்பை விட அதிக மழையைப் பெற்றுள்ளது.
மழை தாக்கத்தால் 14 குடிசைகள் மற்றும் 6 பக்கா வீடுகள் சேதமடைந்துள்ளன; இதற்கான நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலைத் துறையில் 5.65 ஹெக்டேர் மற்றும் வேளாண் நிலங்களில் 9.6 ஹெக்டேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேத அளவீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அணைகள் நிரம்பியவுடன் உபரி நீர் உடனடியாக திறக்கவும், மின்தடை ஏற்பட்டால் விரைவாக சீரமைக்கவும், உயிர் சேதத்தைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 40 இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.”
தொடர்ந்து, அவர் கூறினார்:
“தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 543 குளங்களும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 414 குளங்களும் உள்ளன. இதில் 25% குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தென்காசி வருகை தரவிருந்தார். ஆனால் தொடர்ச்சியான மழையால் நிகழ்ச்சிகள் நடைபெறவிருந்த இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால், அவரின் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை தணிந்ததும் புதிய தேதி அறிவிக்கப்படும்,” என்றார்.
அவர் மேலும் கூறினார், “தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன. எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள்,” என்றார்.