பழநி, கொடைக்கானலில் கனமழை — ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பழநி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இன்று நாள் முழுவதும் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் பழநி வரதமாநதி அணைக்கு நீர் வரத்து வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றங்கரையோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல், பழநி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இடைவிடாது பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதலே பெய்த கனமழையால் கொடைக்கானல் சுற்றியுள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி, வட்டக்கானல், கொட்டிவரை மற்றும் தேவதை அருவிகளில் நீர் ஓட்டம் அதிகரித்தது. மலைப்பாதைகளிலும் சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழை காரணமாக அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது; பல மலைக்கிராமங்களில் இடையிடையாக மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் அடிவாரப் பகுதிகளில் உள்ள வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு மற்றும் பரப்பலாறு அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வரதமாநதி அணையில் 66.47 அடி கொள்ளளவில் 66 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 152 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உபரி நீர் வரட்டாறு, பாலாறு மற்றும் சண்முகநதி வழியாக பாயும். இதனால் பழநி மற்றும் ஆயக்குடி பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், நண்பகல் நேரத்தில் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் நீர் தேங்கி வாகனப் போக்குவரத்து மந்தமானது. மழையால் சீதோஷ்ண நிலை குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.