ஜனவரி 6 முதல் ஜாக்டோ–ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – பாஸ்கரன் அறிவிப்பு
ஜாக்டோ–ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின் போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதுடன், மொத்தம் 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்துவரும் போதிலும், அரசு தரப்பில் எந்தவிதமான நேர்மையான பதிலும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், எத்தனை அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது தொடரும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.