**மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பின் கணவர் கைது
மூளை கைரேகை சோதனையில் வெளிச்சம் கண்ட மர்மம்!**
சண்டிகரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மர்மமான பெண் கொலை வழக்கில், புதிய திருப்பமாக கணவரே குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் புதிரை அவிழ்க்க அதிநவீன தடயவியல் தொழில்நுட்பமான மூளை மின் அலைவு கையொப்ப சோதனை முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் மூத்த பேராசிரியராக பணியாற்றி வந்த பி.பி. கோயல், தனது மனைவி சீமா கோயல் மற்றும் மகள் பாருலுடன் பல்கலைக்கழக குடியிருப்பில் வசித்து வந்தார். 2021 நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளி நாளில், சீமா கோயல் தனது வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அவரது உடலில் கழுத்தை நெரித்த தடயங்கள் காணப்பட்டன. வீட்டிற்குள் வெளியில் இருந்து யாரும் புகுந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. மாறாக, பிரதான கதவு வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல்களில் இருந்த வலைகள் உள்ளிருந்து வெட்டப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.
உயிரிழந்த சீமாவின் கைப்பேசி அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்த மொபைல் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் கழுத்தை நெரித்தே சீமா கொலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளிக்கு முந்தைய இரவு மேல்மாடியில் தூங்கியதாகவும், மறுநாள் காலை பால்காரர் அழைத்தபோது கீழே வந்து பார்த்தபோதுதான் மனைவி இறந்து கிடந்ததை அறிந்ததாகவும் பேராசிரியர் கோயல் ஆரம்பத்தில் காவல்துறையிடம் தெரிவித்தார். ஆனால், சீமாவின் சகோதரர் இந்த விளக்கத்தில் சந்தேகம் எழுப்பி, கொலையை வீட்டிலிருந்த நபரே செய்திருக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
விசாரணையில், காவல்துறை வருவதற்கு முன்பே சீமாவின் உடலை கோயல் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதும், இதனால் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. மேலும், பேராசிரியர் கோயல் வழங்கிய வாக்குமூலங்களில் பல முரண்பாடுகள் இருந்ததால் சந்தேகம் அதிகரித்தது.
உண்மையை வெளிக்கொணர 2021 டிசம்பர் மாதம் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், கோயலுக்கு ஆஸ்துமா இருப்பதால் அந்த சோதனைக்கு தகுதியற்றவர் என 2022 மார்சில் தடயவியல் ஆய்வகம் அறிக்கை அளித்தது. இதன் பின்னர், கோயலும் அவரது மகள் பாருலும் பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
2024 மார்ச் மாதம் பாருலுக்கு உளவியல் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் பேராசிரியர் கோயலுக்கு மூளை மின் அலைவு கையொப்ப சோதனை நடத்தப்பட்டது. இது பொதுவாக “மூளை கைரேகை” சோதனை என அழைக்கப்படுகிறது.
இந்த நவீன விசாரணை முறையில், குற்றம் தொடர்பான காட்சிகள் மற்றும் ஒலிகளைப் பார்க்கவும் கேட்கவும் செய்து, குற்றச்சாட்டுக்குள்ளான நபரின் மூளை எதிர்வினைகள் பதிவுசெய்யப்படுகின்றன. குறிப்பிட்ட சொற்கள் மற்றும் காட்சிகளுக்கு மூளை காட்டும் பிரதிபலிப்புகள் மூலம் குற்றத்தில் அவரின் தொடர்பு ஆராயப்படுகிறது. இந்த வழக்கில் “நீ என் அம்மாவைக் கொன்றாய்” என்ற சொற்றொடர் முக்கிய சோதனை அம்சமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தாயின் மரணத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த மகள் பாருல், தந்தையைப் பார்த்து கடும் கோபத்துடன் குற்றம்சாட்டியதாக கோயல் வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த வாக்குமூலங்களையும், மூளை மின் அலைவு சோதனை முடிவுகளையும் பிற தடயவியல் ஆதாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்த காவல்துறை, சீமா கோயலை அவரது கணவரே கொலை செய்தது உறுதி என தெரிவித்தது.
இதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி பேராசிரியர் பி.பி. கோயல் கைது செய்யப்பட்டார். தந்தை மற்றும் மகளின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளை மேலும் தெளிவுபடுத்த, தந்தையின் முன்னிலையில் மகளிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூளை ஸ்கேன் அடிப்படையில் குற்றவாளியை கண்டறிந்த உலகின் இரண்டாவது வழக்கு இதுவாகும். இதற்கு முன், 2008 ஆம் ஆண்டு புனேவில் நடந்த ஒரு மாணவி கொலை வழக்கிலும் இதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம், மூளை அடிப்படையிலான தடயவியல் விசாரணையை வெற்றிகரமாக பயன்படுத்திய முதல் நாடாக இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.