ரசிகர்களின் கனவை சிதைத்த நிர்வாகக் குழப்பம் – மெஸ்ஸி நிகழ்ச்சியில் என்ன தவறு நடந்தது?
கொல்கத்தாவில் நடைபெற்ற பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் நிகழ்ச்சியில், அவரை நேரில் காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும், ஆத்திரத்திற்கும் ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, “GOAT INDIA TOUR” என்ற பெயரில் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் மெஸ்ஸியை வரவேற்க பெருமளவு ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், பின்னர் சால்ட் லேக் மைதானத்தில் அவருக்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மைதானத்தில் மெஸ்ஸியை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில், ரசிகர்கள் ரூ.4,000 முதல் ரூ.18,000 வரை உயர்ந்த விலையில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சுமார் 20 நிமிடங்களுக்குள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதால், பெரும் தொகை செலவழித்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேடையில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டதால், சாதாரண ரசிகர்களுக்கு அவரை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மைதானத்தில் பெரும் குழப்பம் உருவானது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்திய சிலர், காலி பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை மைதானத்திற்குள் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிலர் தடுப்புகளை உடைத்து மைதானத்திற்குள் நுழைய முயன்றதால், சூழ்நிலை மேலும் பதற்றமடைந்தது. “நாங்கள் அரசியல்வாதிகளை பார்க்கவில்லை, மெஸ்ஸியை பார்க்கத்தான் வந்தோம்” என ரசிகர்கள் ஆவேசமாகக் கூறினர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிகழ்ச்சியை ஒரு மோசடி நடவடிக்கையாகவே பார்க்கிறோம் எனக் கூறிய ரசிகர்கள், செலுத்திய டிக்கெட் தொகையை திருப்பி வழங்க மாநில அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிர்வாக குறைபாடுகளுக்காக மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையே, கலவர நிலை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜாவேத் ஷமீம், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை கைது செய்துள்ளதாகவும் கூறினார். ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும், அந்த நடைமுறைகளை காவல்துறை நேரடியாக கண்காணிக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மொத்தத்தில், தங்கள் விருப்பமான விளையாட்டு நாயகனை காண பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களின் உணர்வுகள், மோசமான நிர்வாகத் திட்டமிடலால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இனி இதுபோன்ற சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, ரசிகர்களின் பாதுகாப்பு, வசதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முதன்மைப்படுத்தும் பொறுப்பான நிர்வாகம் அவசியம் என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.