பிரிட்டன் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி கொள்ளை – 600க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் மாயம்!
பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 600-க்கும் அதிகமான மதிப்புமிக்க வரலாற்று மற்றும் கலைப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் அருங்காட்சியகத்தின் சேமிப்பு கிடங்கில், இந்தியாவின் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த பொருட்கள் உள்ளிட்ட பல அரிய கலைச்சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அந்தக் கிடங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள், விலை உயர்ந்த பொருட்களை திட்டமிட்டு திருடிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களையும், சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளையும் தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் கழித்து தான் தகவல் வெளியிடப்பட்டுள்ளதால், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.