குழந்தைத் திருமணங்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் நேரடி விழிப்புணர்வு
மதுரை மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ள கிராம ஊராட்சியாக அடையாளம் காணப்பட்ட சாப்டூர் ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சாப்டூரில், குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம், உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்களை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்கும் வகையில் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.