காவல் உதவி ஆய்வாளர் மனைவி மரணம் : சந்தேகம் எழுந்ததால் உறவினர்கள் மறியல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மனைவி உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அருண் என்பவரின் மனைவி இளவரசி, வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அங்கு சென்று, இளவரசியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அருண் தனது மனைவியிடம் வரதட்சணை கோரி தொடர்ந்து தகராறு செய்ததாகவும், இளவரசியின் மரணம் இயற்கையற்றது என்றும் குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியல் நடத்தினர்.
அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால், மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.