திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் தீபம் ஏற்ற கோரி பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம்
திருப்பரங்குன்றம் மலை உச்சிப் பகுதியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்தச் சூழலில், தீபத்தூணில் தீபம் ஏற்றும் கோரிக்கையை முன்வைத்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, அனுமதி பெற்ற விதிகளின்படி நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.