கனமழை எச்சரிக்கை – புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
புஸ்சி வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி வீடு அமைந்த திலாசுப்பேட்டை தெருவிலும் தண்ணீர் தேங்கியது. மரப்பாலம், தேங்காய்திட்டு, இந்திரா காந்தி சிலைச் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட இடங்களிலும் இதே நிலை காணப்பட்டது.
புதுச்சேரி–கடலூர் சாலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் பணிகள் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. நெல்லித்தோப்பு தொகுதி சக்திநகரில் வாய்க்கால் பராமரிப்பு செய்யப்படாததால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதை முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் பொதுப்பணித்துறையிடம் தெரிவித்து, உடனடி நடவடிக்கையாக போக்லைன் இயந்திரம் மூலம் அடைப்புகள் அகற்றப்பட்டன.
கிராமப்புறங்களிலும் மழையால் தண்ணீர் தேங்கியதால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேசமயம், ஏரிகள் மற்றும் குளங்களிலும் தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது.
காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்ததால் சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.
கனமழை நிலைமையை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக். 21) விடுமுறை என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். ஏற்கனவே தீபாவளி விடுமுறையுடன் சேர்த்து நான்கு நாட்கள் தொடர்விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், இது ஐந்தாவது நாளாக நீடிக்கிறது.