ஈரோடு பரப்புரை மாநாடு அரசியல் மைல்கல்லாக அமையும்: செங்கோட்டையன்
ஈரோடு நகரில் நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் வகையில் அமையும் என்று அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, வரும் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய, கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அப்பகுதிக்கு சென்றார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் நடைபெறவுள்ள தவெக பரப்புரை கூட்டத்திற்கு எந்தவித தடையும் இல்லை என்றும், இந்த மாநாடு அரசியல் களத்தில் புதிய வரலாறு உருவாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தவெகவின் அரசியல் நோக்கங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள பிற கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்ள தவெக முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.