102 அடியை எட்டிய பவானிசாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பவானிசாகர் அணை 105 அடி முழு திறன் கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகிய நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், அணைக்கு விநாடிக்கு 9,300 கனஅடி தண்ணீர் வரத்து பதிவாகியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக அதே அளவு நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனால் தொட்டபாளையம், தொப்பம்பாளையம், அய்யன் சாலை, எரங்காட்டூர், சத்தியமங்கலம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பவானி ஆற்றின் இருகரைகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரின் காரணமாக ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான கொடிவேரி தடுப்பணை முழுவதும் வெள்ளநீர் நிரம்பியுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக, 3-வது நாளாகவும் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடிவேரி தடுப்பணைக்கு செல்லத் திட்டமிட்ட சுற்றுலாப் பயணிகள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.