ரஜினிகாந்த் பிறந்தநாள் – பிரதமர் முதல் பல்வேறு தலைவர்கள் வரை வாழ்த்து!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அபாரமான நடிப்பு திறமை பல தலைமுறைகளின் மனதையும் கவர்ந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தனது 75வது வயதை எட்டும் இந்த விசேஷ நாளில் அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
அவரது நடிப்பு உலகத்திற்கு அளித்த பங்களிப்பு தொடர்ந்து ரசிகர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு ரஜினிகாந்த் 50 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்திருப்பது மிக முக்கியமான கட்டமாகும் என்று தெரிவித்துள்ள பிரதமர், அவருக்கு நீண்ட நலமான ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்தில்,
தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத முகம், மூன்று தலைமுறைகளிலும் தனது தனித்துவத்தை நிரூபித்தவர், திரை உலக வானில் எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரம், ஐம்பது ஆண்டுகளாக மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் தொடர்ந்து ஆரோக்கியமான நீண்ட ஆயுள் பெற்று, இனியும் பல சாதனைகளை உருவாக்க இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை,
இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடும், அனைவரின் அன்பும் மரியாதையும் பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் — எளிய சூழலில் இருந்து எழுந்து கடின உழைப்பையும் உயர்ந்த குணங்களையும் கொண்டு ஐம்பது ஆண்டுகளாக இந்திய சினிமாவின் உச்சத்தில் திகழ்பவர் என தனது வாழ்த்தில் கூறியுள்ளார்.
மூன்று தலைமுறைகளின் இதயத்தையும் தனது கவர்ச்சியால் கவர்ந்திருக்கும் அவரை சிறந்த தேசிய மனப்பான்மையுடனும் நற்பண்புகளுடனும் விளங்கும் ஒருவராக அண்ணாமலை வர்ணித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் மேலும் பல ஆண்டுகள் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.