பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா மற்றும் ராமசாகர் அணைகள் நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழக–ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை வழியாக 1,200 கனஅடி அளவிற்கு நீர் ஆர்ப்பரித்து பாய்ந்து வருகிறது. இதனால் பாலாற்றின் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் நந்திதுர்கத்தில் தோன்றும் பாலாறு, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு வழியாக 348 கிலோமீட்டர் பாய்ந்து செங்கல்பட்டு அருகே வங்கக்கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா (3.5 TMC) மற்றும் ராமசாகர் (4.5 TMC) அணைகள் நிரம்பிய பின்பே பாலாற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் வரும்.
தொடர்ச்சியான மழையால் தற்போது இரு அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றன. இதன் விளைவாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாகப் பாயும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு வழியாக மலட்டாறு 734 கனஅடி, அகரம் ஆறு 103 கனஅடி, கவுண்டன்யா ஆறு 989 கனஅடி, பொன்னை ஆறு 745 கனஅடி என மொத்தம் 3,341 கனஅடி நீர் பாலாற்றில் கலக்கிறது. வாலாஜா அணைக்கட்டில் நீர்வரத்து 4,086 கனஅடி என பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாலாறு அணைக்கட்டில் இருந்து 3 கால்வாய்கள் வழியாக 1,144 கனஅடி நீர் ஏரிகளுக்குத் திருப்பி விடப்பட்டு, 2,942 கனஅடி நீர் நேரடியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடியதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்கள், வேலூர் மாவட்டத்தில் 6 இடங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இதற்காக சவுக்கு கம்புகள், மணல் மூட்டைகள், ‘பொக்லைன்’ இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையிலுள்ளன.
மேலும், கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளின் பொது பணித்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து வாட்ஸ்அப் குழுவை அமைத்து, பாலாற்றில் வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 519 ஏரிகளில் தற்போது 50% ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. ஆண்டியப்பனூர் ஓடை, மோர்தானா, ராஜாதோப்பு அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.