பாஜக நிர்வாகிகள் கூட்டத்துக்குச் சென்ற வேலூர் இப்ராஹிம் போலீசாரால் தடுத்து கைது!
ராணிப்பேட்டை அருகே நடைபெற இருந்த பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைச் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற வேலூர் இப்ராஹிம் மற்றும் சிலர், போலீசால் வழி மறித்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேல்விஷாரம் பகுதியில் பாஜக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.
அவரது வாகனம் ஆற்காடு மேம்பாலம் அருகே வந்தபோது, போலீசார் திடீரென காரை மறித்து நிறுத்தினர். கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் என்ன என வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பியபோதும், எந்த விளக்கமும் அளிக்காமல், அவரையும் உடன் வந்தவர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.