கனிம வள மோசடிகளைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல — உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் கனிம வள திருட்டை கட்டுப்படுத்த அரசின் முயற்சிகள் திருப்திகரமாக இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கருத்து வெளியிட்டுள்ளது.
கனிம வள கொள்ளை தொடர்பான மனுவை நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம் மற்றும் சி. குமரப்பன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, நேரில் வந்திருந்த கனிமவளத் துறை ஆணையர் மோகனிடம், மாநிலம் முழுவதும் நடைபெறும் கனிம வள திருட்டை தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் அளித்த பதில்: ஆன்லைன் அனுமதி நடைமுறை, ஜிபிஎஸ் கண்காணிப்பு முறை ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பு நடைபெறுவதாகவும், சட்டவிரோதமாக கனிமங்களை எடுப்பவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நீதிபதிகள், அபராதம் விதிப்பது மட்டும் போதாது, குற்றச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கனிம கொள்ளையர்களுடன் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் அதிகாரிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததற்கு விளக்கம் கேட்ட நீதிபதிகள், அரசு அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டால் கனிம வள திருட்டை முற்றிலும் தடுக்க முடியாது என கடுமையாக சுட்டிக்காட்டினர்.
தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிடும் நீதிபதிகள், கனிம வள கொள்ளையை தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கை அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு கனிமவளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.