சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி பிறந்த நாள்: தலைவர்களின் மரியாதை
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி புகழாரம்
எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி,
“சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவு ஜீவி, அரசியல்வாதியுமான ராஜாஜியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மதிப்பையும், மனித கண்ணியத்தையும் நிலைநிறுத்திய அவரது பங்களிப்புகளை நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது”
என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜாஜியின் ஆவணக் காப்பகங்களில் உள்ள சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்து, அவரது சிந்தனைகள் இன்று வரை வழிகாட்டுகின்றன என குறிப்பிட்டார்.
குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வணக்கம்
குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது பதிவில்,
“தொலைநோக்கு பார்வை கொண்ட ஞானம் மிக்க அரசியல்வாதியும், சுதந்திரப் போராட்டத்தில் வீரராக பங்கேற்றவருமான ராஜாஜிக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது நேர்மை, அறிவு மற்றும் தேச சேவை பற்றிய உயர் மதிப்புகள் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாக உள்ளன”
என்று புகழ்ந்தார்.