திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை ஆய்வு – தீபத்தூண் தொடர்பான வதந்திகளைத் தொடர்ந்து விசாரணை
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களையடுத்து, ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறையினர் குழு இன்று மலை மீது ஆய்வினை மேற்கொண்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியைக் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அத்தூண் உண்மையில் தீபத்தூண் அல்ல, ஆனால் நில அளவை குறிக்கும் கல் என்ற வதந்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தொல்லியல் துறை விசாரணைக் குழுவினர் நேரில் ஆய்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையிலிருந்து ஐந்து தொல்லியல் துறை அதிகாரிகளும், மதுரையிலிருந்து இரண்டு அதிகாரிகளும் இணைந்து, காவல் துறையின் பாதுகாப்புடன் மலை உச்சிக்கு சென்று தீபத்தூண் பகுதியில் நேர்முக ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவுகள் விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்.