திருப்பரங்குன்றத் தீபத்தூண் விவகாரத்தில் திமுக பரப்பிய தகவல்கள் தவறானது: தொல்லியல் துறை நூல் வெளிச்சம்
மதுரை திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் உள்ள தீபத்தூண் நாயக்கர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதான உறுதியான சான்றுகள், தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட வரலாற்று நூலில் இடம்பெற்றுள்ளன. மலை உச்சியில் உள்ளது ‘எல்லைக்கல்’ மட்டுமே என்ற திமுக சார்பில் பரப்பப்பட்ட தகவல்கள் தவறானவை என இத்தகவல் தெளிவாக்குகிறது.
உத்தர காமிக ஆகமம், உத்தர காரண ஆகமம் மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சார்ந்த பல்வேறு நூல்கள், தீபம் ஏற்றும் மரபு மற்றும் அதன் விதிகளை விரிவாக பதிவு செய்துள்ளன. தீபம் யாரால், எப்போது ஏற்றப்பட வேண்டும் என்ற வழிமுறைகளும் அந்நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.
1981ஆம் ஆண்டு தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட ‘குன்றத்து கோயில்கள்’ என்ற நூலில், மலை உச்சியில் உள்ள அமைப்பு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட தீபத்தூண் எனவும், அதில் பக்தர்கள் தீபம் ஏற்றிய வரலாறு உள்ளதாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், “உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் தீபத்தூண் உள்ளது; மலை உச்சியில் இருப்பது எல்லைக்கல்” என்ற திமுக சார்ந்த பிரச்சாரம் தவறானது என்பதை நூல் உறுதி செய்கிறது.
உச்சி பிள்ளையார் கோயிலுக்கு மேலாக உள்ள உண்மையான தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி, மதுரை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுக்குப் பிறகும், அரசு மற்றும் காவல்துறை மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கார்த்திகை தீபத்திருநாளில் மட்டும் தீபம் ஏற்றலாம் என்ற கருத்தும் ஆகம நிபுணர்களால் மறுக்கப்பட்டுள்ளது. கார்த்திகை முதல் நாளிலிருந்து அந்த மாத முடிவுவரை எந்த நாளிலும் தீபம் ஏற்றலாம், மேலும் பக்தர்கள் யாரும் தீபம் ஏற்றத் தடை இல்லை எனவும் அவர்கள் விளக்குகின்றனர்.
பல நீதிமன்ற தீர்ப்புகளையும் புறக்கணித்து, தவறான தகவல்களை பரப்பி வந்த பிரச்சாரங்களுக்கு தொல்லியல் துறை நூல் தான் நேரடியான பதிலாக அமைந்துள்ளதாக ஆகம நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மதுரை மட்டுமின்றி, தமிழகமெங்கும் வலுத்து வருகிறது.