நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பிக்கள் தோற்கடிக்க வேண்டும் – இந்து முன்னணி
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்கத் தீர்மானத்தை எம்.பிக்கள் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கில் வழங்கிய தீர்ப்பை காரணம் காட்டியே திமுக, காங்கிரஸ் கட்சிகள் நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இது நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கும் அபாயகரமான போக்காக உள்ளது என்றும் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசு மதிக்காமல் நிர்வாகம் செயல்பட்டது சட்டவிரோதமானது என அவர் கூறினார். தீர்ப்பின் மீது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை விமர்சிப்பதும் பதவி நீக்க முயற்சிப்பதும் நீதித்துறையை மிரட்டும் நடவடிக்கை என்று அவர் சாடினார்.
இந்த தீர்மானத்தை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்றும், நாட்டின் எம்.பிக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது இந்துக்களின் உரிமை என்றும், அதற்கு எதிராக செயல்படும் திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களை வரும் தேர்தலில் மக்கள் கண்டிப்பார்கள் எனவும் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.