திருவாரூரில் இடைவிடாத கனமழை: சம்பா பயிர்கள் சேதம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடங்கியதிலிருந்து இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பா மற்றும் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (அக். 20) காலை 6 மணி முதல் தொடர்ச்சியாக பெய்த மழையில் திருவாரூரில் 69 மி.மீ, குடவாசல் 62.8 மி.மீ, நீடாமங்கலம் 49.4 மி.மீ, நன்னிலம் 23.2 மி.மீ, வலங்கைமான் 36 மி.மீ, மன்னார்குடி 30 மி.மீ, பாண்டவையாறு 43.6 மி.மீ, திருத்துறைப்பூண்டி 36.8 மி.மீ, முத்துப்பேட்டை 15 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதேபோல் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மேல்நிலப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு ஆற்றில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் 1.35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், அதில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவிலான இளம் பயிர்கள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. மேலும், குறுவை பயிர்களின் அறுவடை இறுதி கட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், வயல்களில் இயந்திரங்களை இறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் பயிர்கள் சாய்ந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடவாசல் வட்டம் பெருமங்கலம் கிராமம் உட்பட பல தாழ்வான பகுதிகளில் வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்க முடியாத நிலையில், விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை தார்ப்பாய் போட்டு பாதுகாத்து வருகின்றனர்.
தொடர்ச்சியான மழையால் திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு, விவசாயப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தீவிர கவலையில் உள்ளனர்.