சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: தமிழக அரசின் நிலைப்பாட்டால் ஒப்புதல் தாமதம் என குற்றச்சாட்டு
தமிழக அரசு தனது பிடிவாதமான நிலைப்பாட்டை மாற்றாததால், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ முறை சார்ந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி தொடர்பான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க புதிய சித்தா பல்கலைக்கழகம் உருவாக்கும் மசோதா 2022ஆம் ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில், பல்கலைக்கழக வேந்தர் பதவியை ஆளுநர் அல்லாது முதலமைச்சர் வகிப்பார் என்றும், துணைவேந்தர் உள்ளிட்ட உயரதிகாரிகள் நியமனங்களுக்கு முதலமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூஜிசி விதிமுறைகளுக்கு முரணாக வேந்தர் பதவியை முதலமைச்சரிடம் ஒப்படைத்திருப்பது குறித்து ஆளுநர் விளக்கம் கோரினார். ஆனால் அரசின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்பதால் மசோதா கடந்த ஆண்டே ஆளுநரால் மீண்டும் அனுப்பப்பட்டது.
திருத்தங்கள் ஏதும் செய்யாமல் அரசால் அதே மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி மீண்டும் ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. இரண்டாவது தடவையாக வந்த மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், அதை குடியரசுத் தலைவரிடம் அனுப்பிவைத்தார்.
இந்த சூழலில், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததற்கு காரணம் தமிழக அரசின் பிடிவாத அணுகுமுறையே என பல மருத்துவர்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மசோதாவில் சில மாற்றங்களைச் செய்தால் அனுமதி கிடைப்பது சாத்தியமானது என்றும், மற்ற பல்கலைக்கழகங்களுக்குப் போலவே ஆளுநரே வேந்தராக இருப்பதற்கு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சித்தா பல்கலைக்கழக விவகாரத்தில் முதலில் மாற வேண்டியது தமிழக அரசின் நிலைப்பாடே எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.