செங்கோட்டையனால் 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே – அதிமுகவில் மீண்டும் இணைந்த செல்வம் கருத்து
தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால் அதிகபட்சம் 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் என அவரது அண்ணன் மகன் கே.கே. செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச்சாலை வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.கே.செல்வம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
- செங்கோட்டையனின் செயல்பாடுகளால் தான் 2019-ல் அதிமுகவிலிருந்து விலகி, 2020-ல் திமுகவில் இணைந்ததாகவும்,
- தற்போது ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால் திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
அதிமுகவின் இரண்டரை கோடி தொண்டர்களுக்கு செங்கோட்டையன் துரோகம் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டிய செல்வம், இரட்டை இலையின் வாக்கு வலிமை, தொண்டர்களின் விசுவாசம், சொந்த பந்தங்களின் பலம் ஆகியவற்றின் காரணமாகவே செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் என்பதை குறிப்பிட்டார்.
செங்கோட்டையன் தனிப்பட்ட ஆதரவு மிகக் குறைவாக இருப்பதாகவும், அவர் தனியாக செயல்பட்டால் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.