உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் – நாடாளுமன்றத்தில் புதிய பரபரப்பு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீஸை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதன் பின்னணியில், தீர்மானம் பரிசீலனைக்குக் கொண்டுவரப்படுமா? நிறைவேறும் வாய்ப்பு என்ன? நடைமுறைகள் எப்படி? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்திய அரசியலமைப்பின் படி, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் இந்திய வரலாற்றில் இதுவரை எந்த நீதிபதியும் நாடாளுமன்ற தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதே இல்லை.
இதுவரை நடந்த பதவி நீக்க முயற்சிகள்:
- 1993: உச்சநீதிமன்ற நீதிபதி வி. ராமசாமி மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம், பெரும்பான்மை இல்லாததால் தோல்வியடைந்தது.
- 2011: கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ர சென் மீது நிதி கையாடல் குற்றச்சாட்டு. மாநிலங்களவை தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், மக்களவையில் விவாதத்திற்கு முன் ராஜினாமா செய்தார்.
- 2011: சிக்கிம் தலைமை நீதிபதி பி.டி. தினகரனைப் பதவி நீக்க விசாரணைக்கு அனுப்பிய நிலையில், அவர் பதவி விலகினார்.
- 2015: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.பி. பரிதிவாலாவுக்கு எதிராக 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.
- 2017: ஆந்திர–தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. நாகர்ஜுன ரெட்டிக்கு எதிரான தீர்மானம், ஆதரவு குறைவால் திரும்பப் பெறப்பட்டது.
- 2018: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, “நீதித்துறை நடைமுறையைச் சார்ந்தது” எனக் குறிப்பிட்டு மாநிலங்களவை துணைத் தலைவர் நிராகரித்தார்.
- 2025: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் இல்லத்தில் எரிந்த பணக்கட்டுகள் மீட்கப்பட்டதைக் கூறி பதவி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டது; விசாரணைக்காக மூன்று பேர் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பற்றிய புதிய தீர்மான நோட்டீஸ் நாடாளுமன்றத்தில் என்ன முன்னேற்றத்தை எதிர்கொள்கிறது என அரசியல்சூழல் கவனமாக பார்க்கப்படுகிறது.