வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தென் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால், மன்னார் வளைகுடா, பாக் நீரிணை மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35–45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளுக்கான அனுமதி சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு, நாட்டுப்படகுகளை கரைக்கு இழுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றிய கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. தங்கச்சிமடம் 170 மி.மீ., மண்டபம் 143 மி.மீ., பாம்பன் 113 மி.மீ., ராமேசுவரம் 95 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மழையால் பல தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி, மின்சாரம் துண்டிப்பு மற்றும் மக்கள் அவதி போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.