ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!
நீலகிரியின் சொந்த பழங்குடியின மக்களின் ஆறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணியை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தமிழின் தொன்மைச் சான்றாக விளங்கும் திருக்குறளை மொத்தம் 30 மொழிகளில் வெளியிடும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், அதில் நீலகிரி பகுதிக்குச் சார்ந்த பூர்வீக இனங்களின் மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியினர் பேசும் தனித்துவமான மொழிகள் மொழிபெயர்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இத்திட்டத்துக்காக கூடலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் தமிழ் பேராசிரியர்கள் கரிகாலன் மற்றும் தண்ணரசி, அந்த ஆறு பழங்குடிகளின் உதவியுடன் திருக்குறளை அவர்களது சொந்த மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.