அரசியலைச் சுற்றியுள்ள தெளிவின்மை தொடர…!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இராணுவத் தலைமை தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்ட உயர்பதவி அதிகாரிகள், உலகின் மிகப் பெரிய கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்து நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தை சர்வதேச கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு தேசிய பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதை விரிவாகப் பார்ப்போம்.
சமீபகாலமாக பாகிஸ்தானில் நடந்துவரும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் உலக நாடுகளின் கவனத்தில் அதிகளவில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, ஆசிம் முனீர் இராணுவத் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற பின் அந்நாட்டில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகள், பாகிஸ்தானை கண்காணிக்கும் தேவையை இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு உணர வைத்துள்ளன.
ஆச்சரியமாக, பதவி ஏற்ற மறுநாளே பிரதமர் ஷெரிஃப், ஐ.எஸ்.ஐ தலைவர் ஆசிம் மாலிக் மற்றும் பல முக்கிய அதிகாரிகளுடன், பைனான்ஸ் நிறுவனத்தின் CEO ரிச்சர்ட் டெங்-ஐ இஸ்லாமாபாத்தில் சந்தித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அனுப்புபவர், பெறுபவர் தகவல் வெளிப்படாமல் பரிவர்த்தனை செய்யக்கூடிய கிரிப்டோ செயல்பாடுகள், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதால் இதுவரை பாகிஸ்தான் அரசு கிரிப்டோவுக்கு தடைவிதித்து வந்தது.
மேலும், கிரிப்டோவின் உயர்வு–தாழ்வு மிக வேகமாக மாறுவதால் முதலீட்டாளர்கள் இழப்பிற்குள்ளாகும் அபாயமும் அதிகம். அதோடு சட்டவிரோத பணப் பரிமாற்றம், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அனுப்புதல் போன்ற செயல்களில் கிரிப்டோ பயன்படுத்தப்படும் வாய்ப்பு உயர். இதனால் பாகிஸ்தானின் மத்திய வங்கி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளில் கிரிப்டோ பரிவர்த்தனை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலும் பைனான்ஸ் CEO உடனான அண்மைய சந்திப்பு, அந்நாடு பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட டிஜிட்டல் சொத்துச் சூழலை உருவாக்க விரும்புவதாகக் காட்டுகிறது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவிலான டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்பை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அரசியல் ரீதியாகவும் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. டிரம்ப் குடும்பம் பங்குள்ளதெனக் கூறப்படும் World Liberty Financial நிறுவனத்துடன் ஏற்கனவே பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பைனான்ஸ் இணைப்பு கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசிய அரசியல் நிபுணர் மைக்கேல் கூகெல்மேனின் கூற்றுப்படி, டிரம்ப் – முனீர் உறவில் கிரிப்டோவை இணைக்கும் புதிய அத்தியாயமாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது. இதுவரை மத்திய வங்கியும் பாதுகாப்பு அமைப்புகளும் கிரிப்டோவால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டிவந்த நிலையில், அவற்றை சமாளிக்க பைனான்ஸ் உதவ முன்வந்துள்ளது.
பாகிஸ்தானில் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ வர்த்தகம் நடைபெறுவதாக மதிப்பிடப்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த அரசு அம்னஸ்ட்டி திட்டத்தை அறிவித்து, தண்டனையின்றி கிரிப்டோவை பதிவுசெய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில், பைனான்ஸ் தளத்தில் பாகிஸ்தானியர்கள் வைத்திருக்கும் 5 பில்லியன் டாலர் அளவிலான டிஜிட்டல் சொத்துக்களை தேசிய நிதி அமைப்பில் இணைக்க வேண்டுமெனக் கூட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பைனான்ஸ் நிறுவனம் முன்பு அமெரிக்காவில் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் பில்லியன் கணக்கில் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. அதன் நிறுவனர் சாங்பெங் சாவோ தண்டனையும் அனுபவித்துள்ளார். ஆனால் அதே சாவோவை பாகிஸ்தான் அரசே கிரிப்டோ கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளது என்பதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த முன்னேற்றங்கள் அனைத்தும், முயற்சியின் நோக்கம், எதிர்விளைவுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. கட்டுப்பாடுகள் பலவீனமாக உள்ள நிலையில், கிரிப்டோ வளர்ச்சி வேகமாக அதிகரிப்பதால் வரி தவிர்ப்பு, பணப் பதுக்கல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற அபாயங்கள் மிகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.