வால்பாறையில் சிறுவனை பலிகொண்ட சிறுத்தையை பிடிக்க உடனடி நடவடிக்கை கோரி மக்கள் கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவனை பலிகொண்ட சிறுத்தையை உடனடியாக கூண்டில் பிடித்து பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அய்யர்பாடி ஜே.இ. பங்களா பகுதிக்கு அருகே சிறுத்தை தாக்கியதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியரின் 5 வயது மகன் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சிறுவனின் உடலுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வனத்துறையினர் அறிவித்துள்ள 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையில், ஆரம்ப கட்ட உதவியாக 50 ஆயிரம் ரூபாய் பெற்றோருக்கு அதிகாரிகள் வழங்கினர்.
இந்நிலையில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உலா வரும் சிறுத்தை மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில், அதனை துரிதமாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.