சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்பு – கோவையில் சுயநிறைவு திட்டத்தை முன்னெழுப்பும் ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கம்
தென்னிந்திய பாதுகாப்புத்துறை சப்ளையர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் அசோசியேஷன் சார்பில், ராணுவத்துறையில் உள்ள தொழில் வாய்ப்புகளை சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் கோவையில் ஒரு சிறப்பு தளவாட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்தியை தற்போது காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய “தற்சார்பு இந்தியா” (Atmanirbhar Bharat) திட்டம் நாடு முழுவதும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு துணை புரியும் விதமாக கோவை ரத்தனம் கிராண்ட் ஹாலில் மூன்று நாள் நீடிக்கும் பாதுகாப்புத் துறைக்கான உபகரண மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியுள்ளது.
இந்த கண்காட்சியில் அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைத்துள்ள 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய இராணுவம், வான்படை, கடற்படை ஆகியவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
HAL, BEML, பல தனியார் மற்றும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்கான உபகரண உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை மட்டும் காட்டாமல், ஆர்டர் பதிவு, டெண்டர் வழிகாட்டுதல், ஜெம் போர்டல் பதிவு, சான்றிதழ் பெறுதல் முதல் தரநிர்ணய உதவிகள் வரை ஒரே இடத்தில் வழங்குகிறார்கள்.
இந்திய பாதுகாப்புத்துறைக்கு வருடாந்திரமாக 3 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படும் நிலையில், இத்தகைய கண்காட்சிகள் உள்நாட்டு தொழில்நுட்பத்தை ராணுவத்தில் இணைக்கவும், பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தவும் பெரிதும் துணைபுரியும் என முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார் கருத்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ட்ரோன் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இந்திய ட்ரோன் உற்பத்தி நிறுவனங்களும் சக்திவாய்ந்த முன்னேற்றத்தில் உள்ளன. தனது ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் குறித்து 26 வயதான ஆதர்ஷ் பேசியபோது, ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் மேலும் பல இளைஞர்களை ட்ரோன் தயாரிப்பில் ஈடுபடுத்தும் என்று குறிப்பிட்டார்.
கோவை, ராணுவ தளவாட உற்பத்திக்கான முக்கிய மையமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கண்காட்சி கோவையில் நடைபெறுவது மிகச்சரியான காலம் மற்றும் சூழல் என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.
“தற்சார்பு இந்தியா” திட்டம் உள்ளூர் உற்பத்தி, உள்நாட்டு வணிக வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்தை தொழில் நிறுவனங்கள் அணுக எளிதாகப் புரிய வைக்கும் வகையில், இப்படிப்பட்ட கண்காட்சிகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.