காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை காவல்துறை தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1959ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 10 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களை நினைவுகூரவும், பணியில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்றவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக கலந்து கொண்டார். விழாவில், பணியில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 175 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குவதின் அடையாளமாக 20 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், பல்வேறு காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5.70 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகையும் கருணைத் தொகையும் வழங்கப்பட்டன.