“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தாங்களே முன்வருகிறோம் எனக் கூறி, கிராம மக்கள் கோயில் நிர்வாகத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் மனு சமர்ப்பித்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி திருப்பரங்குன்றம் கிராம சபை மற்றும் பூர்வீக மிராஸ் வகையறா சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுவில், மலை உச்சி தீபத்தூண் தங்கள் முன்னோர்கள் வழிபட்ட பாரம்பரிய தலம் என்றும், அங்கு தீபம் ஏற்றுவதால் எந்த வகையான பிரச்சினையும் உருவாகாது என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அறநிலையத் துறைக்கு தீபம் ஏற்றுவதில் சிரமம் இருப்பின், நாங்களே தீபத்தை ஏற்றி வழிபாட்டு முறையை தொடர தயாராக உள்ளோம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.