திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தடைக்கு எதிராக தமிழகமெங்கும் இந்து முன்னணியின் போராட்டம்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியிருந்தும், காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
திருப்பரங்குன்றம் மலைக்கு தீபம் ஏற்ற அரசின் தடை நடைமுறையில் இருப்பதாக கூறி, அதை கண்டித்த இந்து அமைப்புகள் அங்கங்கிலும் எதிர்ப்புத் தெரிவித்து தெருக்களில் இறங்கினர்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் முன்பு பாஜக மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை எல்லாம் கைது செய்து அருகிலிருந்த தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்படும்போது மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பதற்ற நிலை உருவானது. இதேபோன்று, ஓசூரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.