27 வாகனங்களில் விரைந்த அமலாக்கத்துறை – திமுக நிர்வாகி சங்கரின் ஏலக்காய் தோட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை
தேனி மாவட்டம் போடியில், திமுக மாநில செயற்குழு உறுப்பினரும் நகராட்சி 29-ஆம் வார்டு கவுன்சிலருமான சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
போடி புதூர் இரட்டை வாய்க்கால் அருகிலுள்ள அந்த நிறுவன வளாகத்திற்கு, நேற்று மாலை 27 கார்களில் 32 அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றடைந்தனர். அவர்களுடன் CISF படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இணைந்திருந்தனர்.
நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையை ஆரம்பித்தனர். டெல்லி, கொச்சி, பெங்களூரு, சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த அதிகாரிகள் இந்த விசாரணை அணியில் உள்ளனர்.
சோதனை நடைபெறும் நேரத்தில் சங்கர் அங்கு இல்லாததால், அவரைத் தேடி அதிகாரிகள் அவரது இல்லத்திற்கும் சென்றனர். ஆனால் அந்த வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அருகில் வசிக்கும் மக்களிடம் அதிகாரிகள் தகவல் சேகரித்தனர். சங்கரின் மனைவி ராஜராஜேஸ்வரி போடி நகர்மன்றத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இதே ஏலக்காய் நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதும் தகவல்கள் தெரிவிக்கின்றன.