தஞ்சையில் ஏ.கே.எஸ். விஜயன் இல்லத்தில் நடந்த நகைத் திருட்டு – கொள்ளைப்பட்ட நகைகள் மீட்பு
தஞ்சை மாவட்டத்தில் திமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் இல்லத்தில் திருடப்பட்ட 87 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்திற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி, விஜயனின் வீட்டில் இருந்து 87 சவரன் நகைகள் காணாமல் போனதால் அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருடர்களை பிடிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
விசாரணையில், தருமபுரியை சேர்ந்த சாதிக் பாஷா மற்றும் அவருடைய உறவினர்கள் மொய்தீன், ஆயிஷா பர்வீன், பாத்திமா ரசூல் ஆகியோரும் இதில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்து, அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 87 சவரன் நகைகளையும் மீட்டனர்.
பின் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையிலடைக்கப்பட்டனர்.