வீட்டுக்குள் தீப்பற்றி சிதறிய ஃபிரிட்ஜ்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஓர் இல்லத்தில், குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து எரிந்ததால், சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.
மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்தார். அதே நேரத்தில், ஃபிரிட்ஜின் மீது சில மெழுகுவர்த்திகளையும் வைத்து விட்டு அங்கிருந்து விலகியுள்ளார்.
சற்று நேரத்தில், அந்த குளிர்சாதன பெட்டி தீப்பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்ததுடன், வெடித்து துண்டு துண்டாகப் பிளந்தது. இதைக் கண்டு பதற்றமடைந்த காளியம்மாள் உடனடியாக தீயணைப்பு படையை தொடர்பு கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மின்சாரத்தை நிறுத்தி, மளமளவெனப் பரவிய தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் உள்ளே இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பல பொருட்கள் முற்றிலும் கருகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.