தப்பியோடிய ரவுடியை பிடிக்க முடியாமல் போலீசார் சிக்கலில்
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மலைப்பகுதியில் மறைந்து கிடப்பதாகக் கூறப்படும் ரவுடி பாலமுருகனை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கடையத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையில் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சூர் சிறையில் இருந்த அவரை, ஒரு வழக்கில் ஆஜர்படுத்த தமிழகம் கொண்டு வந்த போலீசார், விசாரணைக்குப் பிறகு மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்தபோது, அவர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தப்பியோடிய பாலமுருகனைப் பிடிக்கச் சென்ற ஐந்து தனிப்படை காவல்துறையினர் மலைக்காடுகளில் சிக்கி, சில நேரம் தவித்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து பாலமுருகனைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கை மேலும் வேகமடைந்துள்ளது.
மூன்று நாட்களாக உணவும் தண்ணீருமின்றி மலைப்பகுதியில் தங்கியிருப்பது சாத்தியமில்லை என்பதால், அவர் வேறு பகுதிக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.