கோவை: கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை — 3 பேருக்கு குண்டர் சட்டம்
கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் 2ஆம் தேதி இந்த மாணவி கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் — சதீஷ் (கருப்பசாமி), காளீஸ்வரர் (கார்த்திக்) மற்றும் குணா (தவசி) — ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
தற்போது, இந்த மூவரும் கோவை மத்திய சிறையில் இருப்பதாகவும், 50 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கின் நீதிமன்ற விசாரணை விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், குற்றவாளிகள் மூவருக்கும் இதற்கு முன்பு திருட்டு குற்றப்பதிவு இருப்பதால், கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.