மைனர் குழந்தைகளை எந்த நிலையிலும் பெற்றோர் கடைகளில் விற்கப்படும் பொருட்களாகப் பார்க்கக் கூடாது; அவர்களின் உணர்ச்சிகளும் விருப்பங்களும் முதன்மையாகக் கருதப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், கணவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 11 வயதான இரட்டை ஆண் குழந்தைகளை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கணவன்–மனைவி இருவரும் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தை அணைந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில், திங்கள் முதல் வெள்ளி வரை குழந்தைகள் தாயுடன் வசிக்கவும், வார இறுதியில் தந்தையுடன் இருக்கவும் முன்பு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், கணவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தார்.
மேல் முறையீட்டு மனுவுக்கான விசாரணையில், இரு குழந்தைகளும் தாயிடமே வாழ விருப்பம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினர். இதன் பேரில், குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்கவும், அவர்களின் கல்வி மற்றும் தேவையான அனைத்து செலவுகளையும் தந்தைச் சந்திக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மைனர் குழந்தைகளை பெற்றோர்கள் அல்லது நீதிமன்றங்கள் எவரும் பொருளாகக் கருதக் கூடாது; அவர்களின் உணர்வு, எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.