சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
சென்னை வாழ முடியாத நகரமாக மாறிக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளே என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தான் எக்ஸில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் போன்ற பெரிய நகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில், நீர்நிலைகளை கைப்பற்றியவர்களுக்கும், திமுக ஆதரவாளர்களுக்கும் பட்டா வழங்கும் நோக்கில், திமுக அரசு கடந்த டிசம்பர் 2, 2025 அன்று வருவாய்த்துறையின் அரசாணைகள் 920 மற்றும் 921 வெளியிட்டுள்ளது.
ஆனால், 2024 ஜூலை 7-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நீர்நிலைகளுக்கு எந்த வகையிலும் பட்டா வழங்கக் கூடாது என்றும், 01.01.2000க்கு பிறகு அனுமதிக்கப்பட்ட அனைத்து பட்டாக்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி அரசு இந்த அரசாணைகளை வெளியிட்டிருப்பது சட்டப்படி தவறு மட்டுமல்ல, உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட செயல் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலை முன்னிட்டு நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாகவும், நீதிமன்றத்தில் இந்த அரசாணைகள் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் நிலையில், மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல பகுதிகள் மழையில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கான முதன்மை காரணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான். குறிப்பாக சென்னை கடந்த பத்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் வெள்ளத்தில் மூழ்குகிறது. கொளத்தூர் ஏரியின் 80% பகுதி—சுமார் 3,000 இடங்கள்—ஆக்கிரமிக்கப்பட்டது. அதிலும் கடந்த 15 ஆண்டுகளாக அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ முதலமைச்சர் ஸ்டாலின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருகாலத்தில் 12.6 சதுர கி.மீ பரப்பளவு கொண்டிருந்த சென்னை ஏரிகள் இன்று 3 சதுர கி.மீக்கும் குறைந்து விட்டன. பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் பெருமளவு மீறல் கொண்டு கட்டப்பட்டு வந்துள்ளது. இதுவே சென்னை வாழத் தகுதியற்ற நகரமாக மாறுவதற்கான அடிப்படை காரணம் என அவர் கூறினார்.
அவ்வாறிருக்கையில், நீர்நிலைகளுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடுவது சட்ட விரோதமானதோடு, எதிர்காலத்தில் முழு தமிழகத்தின் நீர்வளத்தையும் பாதிக்கும் மிகப்பெரிய அபாயம் எனவும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் சுமார் ₹5,000 கோடி செலவில் திமுக ஊழல் புரிந்ததாகவும், இதே முறைப்படியே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் செயல்பட முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நீர்நிலைகளுக்குப் பட்டா வழங்கும் அரசாணைகள் 920 மற்றும் 921-ஐ திமுக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.