திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில், ஊடகங்களுக்கு வழங்கப்படும் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்வதில், நீதித்துறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் விதமாக அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி குறித்த தனிநீதிபதி உத்தரவை சவால் செய்து, கோயில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில், அரசு தரப்பின் வழக்கறிஞர், புதிய இடையீட்டு மனுக்களை இந்த நிலையிலில் ஏற்க வேண்டாம் என்றும், டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் வர இருப்பதால் விசாரணையை 12ஆம் தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினர்.
வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க நீதிமன்றத்தை அழுத்தம் கொடுக்கக் கூடாது, தேவையான வரையில் பொறுமையாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், ஊடகப் பேட்டிகள் மற்றும் சமூக ஊடக கருத்துக்களில் நீதிமன்றத்தின் மரியாதை குன்றாதபடி அனைத்து சார்புடையோரும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
இறுதியாக மேல்முறையீட்டு மனுவின் தொடர்ந்த விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு மாற்றப்படுவது என நீதிமன்றம் உத்தரவிட்டது.