திருப்பரங்குன்றம் தீபம் குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு மிரட்டல்: “பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் பாசிச திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற தடை குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி பத்திரிகையை திமுக அரசு மிரட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு நாட்களாக தீபம் ஏற்ற தடை விதித்ததைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டும் வகையில் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
தமிழர் பண்பாட்டு உரிமையை பறிக்கும் நோக்கத்துடன், நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து, உண்மையை வெளிப்படுத்தும் ஊடகங்களை குற்றம் சாட்டும் பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது என அவர் சாடினார்.
“உண்மைச் செய்திகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து, திமுகவின் ஐடி பிரிவாக செயல்படுமாறு வற்புறுத்தும் ஆட்சி முறை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக இந்தியாவில் நீதிமன்ற உத்தரவை மதிக்காததோடு, பத்திரிகை சுதந்திரத்தையே கட்டுப்படுத்த முயலும் திமுக அரசு, தனது சர்வாதிகார போக்கினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.