“வழிபாட்டு உரிமையை யாரும் தடுக்க முடியாது” – திமுக அரசு காட்டாட்சி நடத்துகிறது: எல். முருகன் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயகத்தை மீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாநில அரசு செயல்படுத்த தவறிவிட்டதாகவும், CISF உதவியுடன் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் ஆணையையும் புறக்கணித்துள்ளதாகவும் எல். முருகன் சாடினார்.
“திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக அரசு காட்டாட்சி செய்கிறது. மாநிலத்தில் இத்தகைய அராஜகத்தை செய்து கொண்டாலும், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் நாடகம் ஆடுகின்றனர்” என்று அவர் கண்டித்தார்.
ஒருவரின் வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், ஓட்டு வங்கியின் பேரில் ஒரு சமூகத்தினருக்கு மட்டும் ஆதரவாக செயல்பட திமுக அரசு இவ்வாறு செயற்படுகிறது என்றும் எல். முருகன் குற்றம்சாட்டினார்.