ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: 8 நாளில் ரூ.25 கோடி காணிக்கை – 5.8 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில், வெறும் எட்டு நாட்களில் ரூ.25 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவை சிறப்பாகச் செய்ய பாடுபட்ட அனைத்து அதிகாரிகள், காவல்துறை, துப்புரவு பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரம்மோற்சவம் தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1 வரை, மொத்தம் 5.8 லட்சம் பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசித்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் 2.42 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 28 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன. உண்டியல் காணிக்கையாக ரூ.25.12 கோடி கிடைத்துள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“பிரம்மோற்சவ காலத்தில் 4.4 லட்சம் பக்தர்கள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் திருப்பதி-திருமலை இடையே பயணம் செய்துள்ளனர்.
முதன்முறையாக 28 மாநிலங்களில் இருந்து 298 கலைக்குழுக்கள் வந்து மாடவீதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் மொத்தம் 6,976 கலைஞர்கள் பங்கேற்றனர். கருட சேவைக்கே மட்டும் 780 கலைஞர்கள் 37 குழுக்களாக பிரிந்து நிகழ்ச்சிகள் நடத்தினர்.
மொத்தம் 65 டன் மலர்கள் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. 36 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு வாகன சேவைகள் ஒளிபரப்பப்பட்டன. 3,500 வாரி சேவகர்கள், 50 மருத்துவர்கள், 60 பாராமெடிக்கல் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர்.
மேலும் 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. 5,000 போலீஸார் மற்றும் 1,800 தேவஸ்தான பாதுகாப்பு பணியாளர்கள் விழாவில் ஈடுபட்டனர். 2,800 துப்புரவு பணியாளர்கள் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றினர்.
கருட சேவையன்று மட்டும், மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள் வழங்கப்பட்டன,” என்று பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.