இந்துவை எதிர்க்கும் திமுக ஆட்சிக்கு உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை
இந்து சமூகத்தின் மத உணர்வுகளையும் வழிபாட்டு உரிமைகளையும் தேவையின்றி குறை சொல்லும் பழக்கத்தை திமுக அரசு நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலைத் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தள்ளுபடி செய்திருப்பது நீதியின் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
அரசு தனது நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றத் தவறியுள்ளதையும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனேயே வழக்கைத் தொடர்ந்திருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழர்களின் கலாச்சார உரிமைகளை புறக்கணிக்க முனைந்த முயற்சி இது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இன்று உயர்நீதிமன்றம் வழங்கிய கண்டனத் தீர்ப்புக்குப் பிறகாவது, திமுக்கின் இந்து மதத்துக்கு எதிரான அணுகுமுறையை அரசு விலக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் இருந்தாலும், இந்து மக்களின் மத உணர்ச்சிகளிலும், அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்திலும் வேண்டாத தலையீட்டில் ஈடுபடுவதை திமுக அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.