உறையூர் பருத்தி சேலைகளுக்கு புவிசார் அங்கீகாரம் – உற்பத்தியாளர்கள் கடன் உதவி கோரிக்கை!
திருச்சியின் உறையூரில் தயாரிக்கப்படும் பருத்தி சேலைக்களுக்கு மத்திய அரசு புவிசார் அடையாளச் சின்னம் (GI Tag) வழங்கியுள்ளது. இந்த பாரம்பரிய தொழிலைத் தொடர்ந்து வரும் கைத்தறி உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
உறையூரில் தயாராகும் பருத்திச் சேலைகள் முழுக்க முழுக்க இயற்கை பருத்தி நூலால் நெசவாகும் தன்மை கொண்டவை. நுட்பமான வடிவமைப்பு, வெப்பத்தையும் குளிரையும் சமநிலையாகத் தாங்கும் திறன், நீண்ட நாள் பயன்படுத்தும் பொறுப்பு ஆகிய காரணங்களால் இவை தனித்துவமானதாக கருதப்படுகின்றன.
இந்தச் சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது, உற்பத்தியில் ஈடுபடும் கைத்தறி நெசவாளர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு GI அங்கீகாரம் பெற விண்ணப்பித்த நிலையில், தரவுகள், மாதிரிகள், வரலாற்றுப் பதிவுகள் உள்ளிட்ட தேவையான அனைத்து விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் உறையூர் பருத்தி சேலைகளின் சந்தைத் தேவை குறைந்து, பலர் கைத்தறி தொழிலிலிருந்து விலகியிருந்த சூழலில், இந்த GI அங்கீகாரம் அவர்கள் மீண்டும் தொழிலுக்கு திரும்பும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
எனினும், கைத்தறி பருத்தி நூலால் தயாரிக்கும் சேலைகளை சந்தையில் விற்பனை செய்வதில் பல சவால்கள் இன்னும் உள்ளதாகவும், தலைமுறையா தலைமுறையாக இந்தக் கைவினையைத் தொடர்ந்து வரும் உற்பத்தியாளர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் இந்தியா மட்டுமன்றி உலகளாவிய சந்தைகளிலும் உறையூர் பருத்தி சேலைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு விரிந்துள்ளதால், தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் கடனுதவி வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.