ஒரு மாதத்தில் சீரழிந்த ஜிஎஸ்டி சாலை – வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி!
பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் நோக்கி செல்லும் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலை, புதிதாக தார் போடப்பட்டு ஒரு மாதம் ஆகும்முன்பே மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையைச் சுற்றிய பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, பெருங்களத்தூர் stretch-ல் மிகுந்த குழிகள் உருவாகி, சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த நிலையால், ஜிஎஸ்டி சாலை பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சாலையாக மாறி விட்டதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குழிகள் நிறைந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், மழை நின்றும் சாலை சரிசெய்யப்படாதது வருத்தமளிப்பதாகவும் வாகன ஓட்டிகள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
பெருங்களத்தூர் பகுதியில் உள்ள இந்த முக்கியமான ஜிஎஸ்டி சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.